மானாம்பதி பயணியர் நிழற்குடையில் இருக்கை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பயணியர் நலன் கருதி, மானாம்பதி பேருந்து நிறுத்த நிழற்குடையில், இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது;

Update: 2025-05-25 10:35 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில், மானாம்பதி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து வந்தவாசி, உத்திரமேரூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் தினமும் திரளானோர் பயணித்து வருகின்றனர்.அதிகளவு பயணியர் வந்து செல்லும் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒதுக்கீடு செய்த 20 லட்சம் ரூபாய் நிதியில் இருந்து புதியதாக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இருப்பினும், பயணியர் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிற்க வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணியர், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் நீண்டநேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பயணியர் நலன் கருதி, மானாம்பதி பேருந்து நிறுத்த நிழற்குடையில், இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News