கோடை மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் பம்பு செட் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் 30 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடியை மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. மழைநீர் தேங்கி உள்ளதால் நெல் மணிகள் முளைவிட தொடங்கியுள்ளது. குறிப்பாக ஒரத்தநாடு, நெய்வாசல், வாண்டையார் இருப்பு மற்றும் சுற்று வட் டாரப் பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது . மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால் அறுவடை செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். தொடர்ந்து வெயில் அடித்தால் மட்டுமே தண்ணீர் வடிந்து அறுவடை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.