கோவை: அரசு மருத்துவமனையில் நோயாளி நகை திருட்டு !
கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளியின் கழுத்தில் இருந்த தங்க நகை மாயமானதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் செந்தில்குமாரின் மனைவி செல்வி (39). இவரின் தாயார் உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். செல்வியின் தாயாரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உறவினர்கள் ஏற்பாடு செய்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 கிராம் எடையுள்ள தங்கக் காசுடன் கூடிய தாலி மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தபோது எவ்வித தகவலும் கிடைக்காததால், செல்வி ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் செல்வபுரம் குமாரபாளையம் அமுல் நகரைச் சேர்ந்த ராஜசேகர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வரும் ராஜசேகர், உயிரிழந்த செல்வியின் தாயார் கழுத்தில் இருந்த தங்கத் தாலியை திருடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரை காவல்துறையினர் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.