கோவை: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரம் சாய்ந்து விபத்து !

தொடர் மழையின் காரணமாக ஆசிரியர் அலுவலக வளாகத்தில் இருந்த மே பிளவர் மரம் சாய்ந்தது.;

Update: 2025-05-28 03:25 GMT
கோவை மாவட்டத்திற்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்று காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு மே ஃப்ளவர் மரம் வேரோடு சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக, மரம் விழுந்த வாகன நிறுத்துமிடத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கடந்த இரண்டு நாட்களாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் சூறைக்காற்றும் வீசி வருகிறது. நேற்று காலை முதல் கோவையில் மிதமான முதல் கனமழை பெய்து வரும் நிலையில், அவ்வப்போது வீசிய சூறைக்காற்று காரணமாகவே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரம் சாய்ந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சாய்ந்த மே ஃப்ளவர் மரத்தை பத்திரமாக அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Similar News