தஞ்சாவூரில், திருடப்பட்ட ஒட்டகத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினர் 

திருட்டு;

Update: 2025-05-28 16:47 GMT
தஞ்சாவூர் அருகே சர்க்கஸ் அமைத்து இருந்தவரிடம் இருந்து திருடப்பட்ட ஒட்டகத்தை காவல்துறையினர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். கரூர் மாவட்டம் வேட்டமலிக்களம், குந்திரமணிப்பாளையம், நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் விஜய் (25). இவர் தனது குடும்பத்தினருடன் ஊர் ஊராக சென்று அங்கேயே கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வருகிறார். சர்க்கஸிற்காக இவர் நாய்கள், ஆடு, குதிரை, ஒட்டகம் ஆகியவற்றை வளர்த்து வந்தார். அந்த வகையில் தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி பகுதியில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு சர்க்கஸ் காட்சி முடிந்து விட்டு விஜய் தனது குடும்பத்தினருடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் 16 ஆம் தேதி காலை எழுந்து பார்த்தபோது கூடாரம் பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் பல்வேறு இடங்களில் ஒட்டகத்தை தேடி பார்த்து உள்ளார். ஆனால் ஒட்டகம் கிடைக்கவில்லை. இது குறித்து தஞ்சாவூர் தாலுகா காவல்நிலையத்தில் விஜய் புகார் செய்தார். இதன்பேரில் தாலுகா உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவந்தனர். பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் ஒட்டகத்தை தேடி வந்தனர். இதில் தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் வேட்டி கட்டிய நபர் ஒருவர் ஒட்டகத்தை அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. இதன்பேரிலும்  விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஒட்டகம் கட்டப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு கடந்த 23 ஆம் தேதி தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று ஒட்டகத்தை மீட்டு வந்தனர். ஒட்டகத்தை திருடிச் சென்றவர்கள் அதனை பராமரிக்க முடியாமல் ரெட்டிப்பாளையம் பகுதியில் விட்டுச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஒட்டகத்தை காவல்துறையினர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன ஒட்டகத்தை மீட்டு தந்ததால், இதுநாள் வரை சர்க்கஸ் நடத்த முடியாமல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த சர்க்கஸ் உரிமையாளர் விஜய் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Similar News