கோவை: சூறைக்காற்றால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் பெருமளவில் மழைக்கு சாய்ந்ததால் விவசாயிகள் பாதிப்பு.;

Update: 2025-05-29 01:26 GMT
கடந்த ஐந்து நாட்களாக கோவையில் பெய்துவரும் அடை மழையுடன் வீசிய சூறைக்காற்றால், தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பனூர் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் பெருமளவில் சாய்ந்துள்ளன. இதனால் வாழை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத் தலைவர் பெரியசாமி நேற்று பேசுகையில், திடீரென வீசிய சூறைக்காற்றால் விவசாயிகளுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் ஏற்பட்ட இந்த இழப்பால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், தற்போதைய இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பெரியசாமி, தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, கோவை மாவட்டத்தில் மழை மற்றும் காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய விளைபயிர்களுக்கான உரிய இழப்பீட்டை போர்க்கால அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த திடீர் இயற்கை சீற்றத்தால், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Similar News