கோவை: ஹெல்மெட் இல்லாத இளைஞர் மீது தடியால் தாக்குதல் !
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோவை மாவட்டம், திருச்சி சாலை, அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்த போலீசார், ஹெல்மெட் அணியாத இளைஞரை நிறுத்தி ஆவணங்களை காண்பிக்க கேட்டனர். இளைஞர் தனது மொபைல் மூலம் ஆவணங்களை காட்டியதாக கூறப்படுகிறது. எனினும், போலீசார் அசல் ஆவணங்கள் அல்லது நகல்கள் தேவை எனக் கூறியதால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது, மொபைலை போலீசார் பறிக்க முயன்றதாகவும், இளைஞர் அதை தடுக்க முயன்றபோது போலீசாரில் ஒருவரால் தடியால் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் காரணமாக இளைஞரின் மொபைல் கீழே விழுந்து சேதமடைந்தது. ஹெல்மெட் இல்லாததற்காக அபராதம் விதிக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக மொபைலை பறித்து தாக்குவது சரியா? எனக் கேள்வியெழுப்பும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இது பொதுமக்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.