நகைக்கடன் நிபந்தனைகளை கைவிட வலியுறுத்தி தி.மு.க தலைமையில், தஞ்சையில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகளுக்கு எதிராகவும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக்கடன் நிபந்தனைகளை உடனே கைவிட வலியுறுத்தி தி.மு.க. விவசாய அணி மற்றும் காவிரி டெல்டா மாவட்ட அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில், தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க விவசாய அணி மாநிலச் செயலாளரும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை தாங்கி பேசும் போது, ஒன்றிய அரசின் கைப்பாவையாக ரிசர்வ் வங்கி செயல்பட்டு நகைக்கடனுக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதனால் ஏழை விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த நகைக்கடன் கொள்கையை உடனே கைவிட வேண்டும். நாட்டின் விவசாயிகளை வஞ்சிக்கக்கூடாது. ரிசர்வ் வங்கி நிபந்தனைகளை முழுமையாக திரும்பப் பெறும் வரை போராடுவோம்" என்றார். முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் முன்னிலை வகித்து பேசும்போது, "ஒன்றிய அரசு தொடர்ந்து விவசாயிகள், சாமானிய மக்களை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது நகைக்கடன் மீது ஒன்றிய அரசின் கைப்பாவையாக விளங்கும் ரிசர்வ் வங்கி பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. ரிசர்வ் வங்கி நிபந்தனைகள் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் செயல்படுத்தப்படாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெளிவாக கூறிவிட்டார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். எப்போதும் அவர் விவசாயிகளின் அரணாக இருப்பார்" என்றார். இதில், திமுக மாவட்ட செயலாளர்கள் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.(மத்திய), கல்யாணசுந்தரம் எம்.பி (வடக்கு ), பழனிவேல் (தெற்கு ), நிவேதா முருகன் எம்.எல்.ஏ.(மயிலாடுதுறை), செல்லப்பாண்டியன் (புதுக்கோட்டை), எம்.பி.க்கள் முரசொலி, செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி. நீலமேகம், நா.அசோக்குமார், பன்னீர்செல்வம், மாரிமுத்து, முன்னாள் எம்.பி. ராமலிங்கம், தி.மு.க விவசாய அணி மாநில துணை செயலாளர் ஜித்து, தஞ்சை மாநகர செயலாளரும், மேயருமான சண்.ராமநாதன், கும்பகோணம் மாநகர செயலாளர் சுப.தமிழழகன், காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், தி.க. பொதுச்செயலாளர் ஜெயகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர்கள் மாசிலாமணி, சாமி.நடராஜன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நகைக்கடனுக்கான புதிய நடைமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். முடிவில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு ஏ.கே.எஸ். விஜயன் நிருபர்களிடம் கூறும்போது, இனிமேல் வங்கிகளில் நகைக்கடன் பெற வேண்டுமானால் நகை வாங்கிய அசல் ரசீது அல்லது தகுந்த ஆவணத்தை தர வேண்டும். 22 கேரட் அல்லது அதற்கு மேற்பட்ட சுத்தமான நகைகளுக்கு மட்டுமே இனி நகைக்கடன் வழங்கப்படும். விவசாயிகள் நகையை புதுப்பித்து மீண்டும் கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வாங்கிய நகைக்கடனை முழுயைாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகைக்கடன் வழங்கப்படும் என நகைக்கடன் பெறுவதற்கு 9 நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இது மோசமான நிபந்தனைகள். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை வஞ்சிக்கும் நிலையாகும். இந்த நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இப்போது நகைக்கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. இது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றி. புதிய விதிமுறைகளை மீண்டும் தொடர்ந்தால் அகில இந்திய அளவில் எங்களது போராட்டம் தொடரும்" என்றார்.