குற்றாலத்தில் திருவாவடுதுறை ஆதின இடத்தில் நில அளவீட்டு பணிக்கு எதிா்ப்பு

திருவாவடுதுறை ஆதின இடத்தில் நில அளவீட்டு பணிக்கு எதிா்ப்பு;

Update: 2025-05-31 01:46 GMT
தென்காசி மாவட்டம் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள மேக்கரை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் உள்ளன. இதில், குற்றாலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள 1ஏக்கா் 12 சென்ட் அளவுள்ள இடம் 1989இல் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருவாவாடுதுறை ஆதீனம் சாா்பில் அப்பகுதியில் உள்ள இடங்களை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின் பெயரில் நில அளவீடு செய்ய வந்தனா். அப்போது, பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட 1 ஏக்கா் 12 சென்ட் நிலத்தையும் சோ்த்து அளவிட்டு வேலி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு குற்றாலம் பேரூராட்சித் தலைவா் கணேஷ் தாமோதரன், துணைத் தலைவா் தங்கபாண்டியன், பேரூராட்சி உறுப்பினா்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பராசக்தி நகா் செல்வதற்கு திருவாவடுதுறைக்குச் சொந்தமான பாதையை 40 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதே பகுதியில் குடிநீா் திட்டத்திற்கான கிணறு 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. பொது சுகாதார வளாகம் சுமாா் 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் உள்ளது. எனவே, இப்பகுதி மக்களுக்கு இடையூறின்றி நில அளவீடு செய்ய வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். நீதிமன்ற அறிவுறுத்தல் பெயரில் செயல்பட வேண்டும்; ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தை மட்டும் அளவீடு செய்ய வேண்டும் என குற்றால பேரூராட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, நிலங்களை அளவீடு செய்து குறியீடு கற்கள் நடப்பட்டன. இந்நிகழ்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலா் சுஷாமா, சுகாதார அலுவலா் ராஜ் கணபதி, அறங்காவலா் குழு உறுப்பினா் ஸ்ரீதா், ஜெயகுமாா், மணிகண்டன், குமாரசாமி, செல்வராஜ், சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Similar News