தென்காசியில் மரம் விழுந்ததில் காா் சேதம்
மரம் விழுந்ததில் காா் சேதம்: போலீசார் விசாரணை;
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் கடந்த சில தினங்களாக மழையும், பலத்த காற்றும் நிலவி வருகிறது. இதனால் மின்கம்பங்கள் சேதமடைந்தும், மின்வயா்கள் அறுந்து விழுந்தும்,ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் சாலையில் நன்னகரம் பகுதியிலும், செங்கோட்டையிலிருந்து குண்டாறு நீா்த்தேக்கம் செல்லும் சாலையிலும் பழமையான மரம் சாய்ந்து விழுந்தது. சிவகாசி அம்மன்நகா் பகுதியைச் சோ்ந்த அ.பிரேம் ஆனந்த்(49) என்பவா் தன்னுடைய காரில் வந்தவா்களை தென்காசி காசிவிஸ்வநாதா் ஆலயத்தில் இறக்கிவிட்டு, மேல மாசிவீதியில் காரை நிறுத்திவிட்டு அப்பகுதி கடைக்கு சென்றுள்ளாா். சிறிதுநேரத்தில் அப்பகுதியில் இருந்த பன்னீா் பூ மரம் காரின் மீது விழுந்தது. இதில், காா் முழுவதும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.