வழக்கில் ஜாமீன் எடுக்க தாமதம் செய்த மனைவி வாயில் பூச்சி கொல்லி மாத்திரையை திணித்து கொன்ற கணவன் கைது

கிரைம்;

Update: 2025-06-02 16:22 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் (வயது.50), இவரது மனைவி சரஸ்வதி (வயது.47), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பாகம்பிரியாள் திருமணமாகி அதிராம்பட்டினத்தில் வசித்து வருகிறார். பால்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்றார். இதனால் பால்ராஜ் தன்னை ஜாமீனில் எடுக்க, தனது மனைவி சரஸ்வதியிடம் கூறியுள்ளார். ஆனால், ஜாமீன் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து, காலதாமதத்திற்கு பிறகு கடந்த சில நாட்கள் முன்பு பால்ராஜ் ஜாமீனில் சிறையில் இருந்து வந்தார். ஜாமீனில் எடுக்க தாமதம் செய்ததால் மனைவி சரஸ்வதியிடம் அடிக்கடி பால்ராஜ் தகராறு செய்து வந்தார். இதனால் ஆத்திரத்தில் சனிக்கிழமை பால்ராஜ், பூச்சிக்கொல்லி மாத்திரையை வாங்கி வந்தார். வீட்டில் இருந்த மனைவி சரஸ்வதியை பிடித்து, அவரது வாயில், வலுக்கட்டாயமாக பூச்சிக்கொல்லி மாத்திரையை போட்டு, தண்ணீரை ஊற்றி சாப்பிட வைத்துள்ளார். சரஸ்வதியின் அழுகை சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்தனர். பிறகு சரஸ்வதி நடந்ததை கூறி அழுதுள்ளார். பிறகு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சரஸ்வதி கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சரஸ்வதி சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் பால்ராஜ் மகள் பாகம்பிரியாள் புகார் அளித்தார். புகாரின் பேரில், பால்ராஜை ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

Similar News