கோவை: அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயார் - விசைத்தறியாளர்கள் எச்சரிக்கை !

ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி நடைபெற்ற போராட்டத்தில், உடன்பாடு எட்டப்பட்டதில் அதை அமல்படுத்தவில்லை என மீண்டும் போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவிப்பு.;

Update: 2025-06-03 02:09 GMT
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சோமனூரில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று அவசர பொதுக்குழுக் கூட்டம் நடத்தினர். கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஏப்ரல் 21 முதல் கூலி உயர்வை வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, விசைத்தறியாளர்கள் அந்த நேரத்தில் நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த கூலி உயர்வு இன்றுவரை பல ஜவுளி உற்பத்தியாளர்களால் அமல்படுத்தப்படவில்லை என்று விசைத்தறியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சோமனூர் பகுதியில் சில உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை வழங்கினாலும், அவனாசி, தெக்கலூர், பல்லடம் போன்ற பகுதிகளில் இவ்வாறு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு ஊதிய உயர்வை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் தங்கள் வரவு செலவுப் பில்களை தெளிவாக வழங்க வேண்டும் என்றும், விசைத்தறியாளர்கள் அவற்றை கோரி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நியாயமான குறைந்தபட்ச கூலி உயர்வாகக் குறைந்தது 10 முதல் 15 சதவீதம் வழங்கப்பட வேண்டுமெனவும், இதனைக் கைவிடுமாறு விவாதிக்கப்பட்டது. இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு விரைவில் அடுத்த கட்டப் போராட்டங்களை அறிவிக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் சங்கத் தலைவர் பூபதி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இறுதியில் துணைத்தலைவர் வெற்றிவேல் நன்றியுரை ஆற்றினார். ஊதிய உயர்வை அமல்படுத்தாததை வலியுறுத்தி மீண்டும் போராட்ட சூழ்நிலை உருவாகும் நிலையில், கோவை மற்றும் திருப்பூர் ஜவுளித் துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News