காவிரி படித்துறையில் குப்பைகளால் மூடப்பட்ட படிகள்

குமாரபாளையம் நகராட்சி அருகே காவிரி படித்துறையில் படிகள் அனைத்தும் குப்பைகளால் மூடப்பட்டன.;

Update: 2025-06-04 15:01 GMT
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே காவிரி படித்துறை உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு, சுமார் 20 படிகளுக்கும் மேல் இருந்த நிலையில், தற்போது, அனைத்து படிகளும் குப்பைகளால் மூடப்பட்டன. இந்த படித்துறையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி, குளிக்கவும், துணி துவைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெகு தூரம் சென்று துணிகள் துவைத்து, பாரத்தை சுமத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் அருகில் உள்ள எண்ணற்ற கோவில்களில், திருவிழா என்றால், இந்த படித்துறையில்தான் தீர்த்தக்குடங்கள் எடுத்து சென்று, சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்வார்கள். தற்போது எதற்கும் உதவாத நிலையில் உள்ளதால், தீர்த்தம் எடுக்க வருபவர்கள் கூட, வேறு படித்துறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த படித்துறை பகுதியில், நகராட்சி அலுவலகம் அருகே சுவாமிகள் ஊர்வலம் கொண்டு செல்லும் வாகனங்கள் நிறுத்த இடம் உள்ளது. ஆனால் மற்ற படித்துறையில் வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதி இல்லை. நகராட்சி அலுவலகம் இருக்கும் இடம் அருகில் உள்ள படித்துறை, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. இந்த படித்துறையில் உள்ள குப்பைகள் அகற்றி, பொதுமக்கள் இறங்கி காவிரி ஆற்றுக்கு செல்லவும், கோவில்காரர்கள், இந்த படித்துறையில் தீர்த்தக்குடங்கள் எடுத்து செல்லும் வகையில், தூய்மை படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News