மாற்றுப் பணியில் வந்து அரசுப் பள்ளியில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்...  பரிவட்டம் கட்டி சாரட் வண்டியில் மாணவர்களை ஏற்றி வந்து மரியாதை 

மாணவர்கள்;

Update: 2025-06-04 17:30 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி உடையார் தெரு பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் செ.இராமநாதன். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் காலிப் பணியிடமாக இருப்பதால் இப்பள்ளிக்கு மாற்றுப் பணிக்கு வந்துள்ளார்.  இவர் இப்பள்ளிக்கு வருகை தந்த பின்பு ஏராளமான மாற்றங்களை செய்துள்ளார். இவர் இந்தப் பள்ளிக்கு வருகை புரிந்த பின்பு கோவை ஆக்கம் அறக்கட்டளையை அணுகி பள்ளி மாணவர்களுக்கு நாற்காலிகளை அன்பளிப்பாக பெற்றுள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பேராவூரணி ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் இ.வீ.சந்திரமோகனை தொடர்பு கொண்டு டீ சர்ட், பேண்ட், அன்பளிப்பாக பெற்றுள்ளார். இந்தப் பள்ளி 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து  ஆண்டு விழா நடைபெறவில்லை. இவர் இந்தப் பள்ளிக்கு பொறுப்பேற்ற பின்பு பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, ஊர் பொதுமக்கள் உதவியுடன் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்தினார்.  ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றதால்  இந்த ஆண்டு புதிதாக ஐந்து மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில்  மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி  சாரட் வண்டியில் மேளதாளம் முழங்க பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு பள்ளிக்கு அழைத்து வந்தனர்.  வருகை தந்த அனைவரையும் பொறுப்பு தலைமையாசிரியர் செ.இராமநாதன் வரவேற்றார். பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன் புத்தகங்கள், சீருடைகள் நோட்டுகள் ஆகியவற்றை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இலஞ்சியம், பள்ளி மேலாண்மைக் குழு துணை தலைவர் ரஷ்யா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துரைக்கண்ணு, ராஜேந்திரன், மற்றும் புரவலர்கள் பழனிச்சாமி, பாஸ்கரன், ராஜதுரை, ரங்கசாமி, மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக  பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர் சாருமதி நன்றி கூறினார்.

Similar News