கமல்ஹாசன் வழக்கை மூவர் அமர்வு விசாரிக்க வேண்டும் : தி.வேல்முருகன்
பேட்டி;
கன்னட மொழி பிரச்னை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கர்நாடக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மூவர் அல்லது ஐவர் அமர்வு விசாரிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார். தஞ்சாவூரில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் கடன் விடுதலை மாநாட்டில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: திரைப்பட விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் நாமெல்லாம் ஒரு தாய் குடும்ப உறவுகள் என்றும், ஒரு மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்தவர்கள் எனவும் அண்டை மாநில நட்புணர்வை போற்றுகிற வகையில் கருத்தைப் பதிவு செய்தார். இது எந்தவிதத்திலும் தவறான கருத்தல்ல. இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவக்குமாரும், அம்மாநில பாஜக தலைவரும், அமைச்சர்களும் தொடர்ந்து கன்னடர்களை அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி மொழி உணர்வைத் தூண்டி, அரசியல் லாபத்தைத் தேடுகிற முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதேபோல, கன்னட திரைத்துறையினரும் கமல்ஹாசனை எதிர்த்து வக்கிரமான வார்த்தைகளை வெளியிட்டுள்ளதையும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இப்பிரச்னையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை கமல்ஹாசன் நாடியபோது, நீதிபதி கேள்வி எழுப்பி, கடுமையான சொற்றொடர்களைப் பயன்படுத்தியிருப்பது ஏற்புடையதல்ல. இது நீதி பரிபாலன முறைக்கே தீங்கானது. இதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கண்டிக்க வேண்டும். மேலும், கர்நாடக மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இந்த வழக்கை மூவர் அல்லது ஐவர் கொண்ட நீதிபதிகளைக் கொண்டு விசாரித்து, கர்நாடக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள், கன்னட அமைப்புகளின் அடாவடி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இரு மாநில மக்களிடம் பதற்றமில்லாத சூழ்நிலையை உருவாக்க முன்வர வேண்டும்" என்றார் தி.வேல்முருகன்.