அரசு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணிடங்களை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு முழுமையாக உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2025-06-05 06:00 GMT
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த மே 31-ம் தேதி வரை பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அந்த காலிப்பணியிடத்தை காலம் தாழ்த்தாமல் முழுமையாக நிரப்ப தவறிவிட்டது. அரசு திட்டங்கள் தொய்வில்லாமல் நடைபெற அரசுத் துறை காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்ப வேண்டும். தமிழக அரசின் 43 அரசுத் துறைகளில் பல்வேறு நிலைகளில் சுமார் 15 லட்சம் வரை பணிபுரிவார்கள் என்ற நிலையில் தற்போது சுமார் 9.50 லட்சம் பேர் பணியில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிதியாண்டில் சுமார் 20,000 பேர் வரை ஓய்வு பெற இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள சுமார் 75,000 காலிப்பணியிடங்கள் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. கடந்த ஏப்ரல் வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து சுமார் 31.84 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். காலிப்பணியிடங்கள் அதிகரித்துக்கொண்டே போனால் தமிழகம் வளர்ச்சி அடையாது. எனவே, காலிப்பணிடங்களை காலம் தாழ்த்தாமல் முழுமையாக உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் போட்டித் தேர்வுக்கான முடிவுகளை விரைவாக வெளியிட்டு, அரசுப்பணிகளை அவ்வப்போதே வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News