தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் - சிஐடியு மீன்பிடி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட சிஐடியு மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் புதன்கிழமை மாலை கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.பெரியண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர். மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். இதில், சங்க நிர்வாகிகள் மாவட்டப் பொருளாளர் ஆர். கர்த்தர், மாவட்ட துணைச் செயலாளர் வி. சுப்பிரமணியன், ஏ.நாகூர் பிச்சை, மாவட்ட துணைத்தலைவர் வி.நாகேந்திரன், சிபிஎம் கிளைச் செயலாளர் எஸ்.அகிலன், மாவட்ட துணை பொருளாளர் எஸ்.நிஜாமுதீன் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், "கூட்டுறவு சங்கம் அமைக்கப்படாத மீனவர் கிராமங்களில் உடனடியாக அமைக்க வேண்டும். மீனவர் கிராமங்களில் கடற்கரை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் விடுபட்டவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மாட்டுக்கொட்டையாக மாறி உள்ள சேதுபாவாசத்திரம் பேருந்து நிலையத்தை உடனடியாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சிவன் கோவில் குளத்தை பராமரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மீனவர் குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வீடு வழங்க வேண்டும். கடல் மேலாண்மை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பெண்களை உறுப்பினராக சேர்த்திட வேண்டும். தடைக்கால நிவாரணமாக ரூ.18,000 வழங்க வேண்டும். கடற்கரை கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆற்று முகத்துவாரங்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும்" என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.