கோவை: காட்டு யானை அட்டகாசம்-சுற்றுச்சுவர் சேதம்
ஆழியாறு பகுதியில் ஒற்றை காட்டு யானை தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட மணிமண்டபத்தின் சுற்றுச்சுவரை அந்த யானை இடித்துத் தள்ளியது.;
பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் ஒற்றை காட்டு யானை கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஆழியாறு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகில் உள்ள அணை கட்டுமானத்தின்போது உயிரிழந்த தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட மணிமண்டபத்தின் சுற்றுச்சுவரை அந்த யானை இடித்துத் தள்ளியது. இதுகுறித்து பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் விரைந்து வந்து யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டும் இதே பகுதியில் யானை சுற்றுச்சுவரை சேதப்படுத்தியதால், யானையின் வழித்தடத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.