தஞ்சாவூர் மாநகரில் உள்ள குப்பைகிடங்களை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டம் :மேயர்
மாநகராட்சி;
தஞ்சாவூர் மாநகரில் உள்ள குப்பைக் கிடங்கை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு அதற்கான பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சியில் வியாழக்கிழமை மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். ஆணையர் கோ.கண்ணன் மற்றும் அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசியது: தஞ்சாவூரில் பல வார்டுகளில் புதை சாக்கடையின் மேன்ஹோல் உடைந்து, கழிவு நீர் வெளியேறுகிறது. பல வீடுகளில் கழிவுநீர் எதிர்த்து திரும்ப வீடுகளுக்கே வருகிறது. புதை சாக்கடை சீரமைக்க வேண்டிய வாகனம் எப்போது பார்த்தாலும் வேலை உள்ளதாக கூறி வருவதில்லை. புதை சாக்கடை சீரமைக்க, குடிநீர் இணைப்பு சீரமைக்க மாநகராட்சி பணியாளர்கள் பொதுக்களும் ரூ.3 ஆயிரம் வரை பணம் கேட்கின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் வேலை செய்வதில்லை. இது தொடர்பாக ஆணையரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பூக்காரத் தெருவில் உள்ள மாரிகுளம் பம்பின் ஸ்டேசன் பகுதியில் சீரமைப்பை மேற்கொண்டால் தான் புதை சாக்கடை பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண முடியும். அதே போல் 15 ஆவது வார்டில் இரு நாட்களாக குடிநீர் வீடுகளுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அண்ணாநகர் அருகில் உள்ள ராஜராஜன் நகரில் குடிநீர் கலங்கலாக வருகிறது. இந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். பூக்காரத் தெருவில் முருகன் கோயில் எதிரை உள்ள உயர்மின் கோபுர விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. தஞ்சாவூர் காமராஜர், சரபோஜி சந்தைகளில் கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் திரும்ப ஒப்படைத்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான வைப்புத் தொகையை வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடிக்கிறது உடன் வழங்க வேண்டும். தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே உள்ள ஃபுட் ஸ்ட்ரீட்டில் உள்ள கடைகளில் மேயர் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் வசூலிக்கின்றனர். அங்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அவர்களிடம் தினசரி வாடகை வசூலிக்க வேண்டும். தஞ்சாவூர் கீழராஜவீதியில் தினமும் மாலை நேரங்களில் தெருவோர கடைகளால் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த வேண்டும் என்றனர். இதற்கு பதிலளித்த மேயர் சண்.ராமநாதன்: தஞ்சாவூர் மாநகராட்சியில் புதை சாக்கடை கழிவு நீர் அடைப்பை சீரமைக்க ஒரு வாகனம் தான் உள்ளது. அடுத்த வாரம் நான்கு வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதை சாக்கடை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் யாரும் குடிநீர், கழிவுநீர் சீரமைப்புக்காக பணம் கொடுக்க வேண்டாம். அவ்வாறு கேட்டால் உரிய புகார் அளித்தால், அவர்களை உடனடியாக வேலையை விட்டு நீக்கப்படுவார்கள். தஞ்சாவூரில் இரு ஆண்டுகளாக 80 சதவீத சாலைப் பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள 20 சதவீத பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் நிறைவடையும். தஞ்சாவூர் மாநாகராட்சியில் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்குக்கு தீர்வு காணும் விதமாகவும், மாநகராட்சியோடு இணையவுள்ள 14 ஊராட்சிகளுக்கும் சேர்த்து குப்பைகளை சேகரம் மையம் அமைக்க புறநகர் பகுதியில் 18 ஏக்கரில் புதிய குப்பை கிடங்குக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த இடம் மாநகராட்சியால் விலை கொடுத்து வாங்கிய பின்னர் குப்பை கிடங்கு மாற்றப்படும்" என்றார். கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்: மாநகராட்சி கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர் கேசவன் கூறியது: எனது வார்டில் அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் செய்து தர மறுக்கப்படுகிறது. கழிவுநீர் அப்பகுதியில் தேங்கியிருப்பதால் கிணறுகளிலும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் குழாய்களில் கழிவு கலக்கிறது. சாலை வசதிகள் சீரமைக்கப்படவில்லை, எனவே தான் நான் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளேன். மேலும், சுகாதாரமற்ற குடிநீரை பாட்டிலிலும் கொண்டு வந்துள்ளேன். நாய்களை கருத்தடைக்காக பிடிப்பவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை, அந்த தொகையை உடன் உரியவர்களுக்கு வழங்க வேண்டும்" என கூட்டத்தில் பேசினார்.