அரியலூர் மாவட்டம் செந்துறையில் போலியாக நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

அரியலூர் மாவட்டம் செந்துறையில் போலியாக நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது செய்தனர்.;

Update: 2025-06-07 03:53 GMT
அரியலூர், ஜூன்.7- அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நமங்குணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல் என்பவரின் மனைவி இந்திரா (47) தனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வாங்கிய நகையை குடும்ப சூழ்நிலையின் காரணமாக அடகு வைப்பதற்கு செந்துறை சென்றுள்ளார். அங்கு குழுமூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமு(32) என்பவர் தான் செந்துறையில் அடகு கடை நடத்தி வருவதாகவும், மற்ற கடையை விட குறைவான வட்டியில் பணம் தருவதாகவும் கூறியதால் 9 1/2 பவுன் நகைகளை வெவ்வேறு தேதியில் அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில் அடகு வைக்கப்பட்ட நகையை மீட்க அசல் மற்றும் வட்டியுடன் கடந்த ஆண்டு சென்று பார்த்த போது கடை மூடப்பட்டு இருந்தது. இதனால் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த போது மேற்படி ராமு பல பேரிடம் அடகுக்கு நகைகளை வாங்கி மோசடி செய்து ஏமாற்றி விட்டு தலை மறைவாக இருப்பதாக கூறினார்கள். இதனையடுத்து இந்திரா அளித்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அமரஜோதி தலைமையிலான குற்றப்பிரிவு காவல் துறையினர் தலைமறைவாக இருந்து வந்த ராமுவை கைது செய்து, மாவட்ட காவல் அலுவலகம் கொண்டு வந்தனர். மேலும் மாவட்ட குற்றப்பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் .சந்திரமோகன் மோசடி சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். இவ்விசாரணையில் ராமு அரசு அனுமதி பெறாமல் போலியாக நகை அடகு கடை நடத்தியதும், மேலும் இதுபோல பல நபர்களை நம்ப வைத்து நகைகளை மோசடி செய்ததும் தெரிய வந்தது. பிறகு ராமுவின் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த மோசடி சம்பந்தமாக இதுவரை 20க்கும் மேல் பாதிக்கப்பட்ட நபர்களிடம் மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் இம்மோசடியில் நிறைய நபர்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என்பதால் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News