ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
குமாரபாளையம் அருகே ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.;
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ராஜ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அதனை பராமரித்து புதுப்பிக்கப்பட்டது. இந்த பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் முதல் தெய்வமாக ஊரின் நுழைவுப் பகுதியிலேயே அமைந்துள்ளதால், இந்த விநாயகர் கோவில் இப்பகுதியில் தவிர்க்க முடியாத ஒரு ஆலயமாக உள்ளது. இதனை புதுப்பிக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றது. முழுமையாக முடிவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த மூன்றாம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அதனையடுத்து கணபதி யாகம், மகாலட்சுமி யாகம் மற்றும் பல வகையான யாகங்கள் நடத்தபட்டது. நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழா நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கபட்டது.