அரசு பஸ் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்கும் அவலம்
காங்கேயம் பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்கும் அவலம்;
காங்கேயம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் அவதிப்படுகிறார்கள். காங்கேயம் அரசு பஸ் பணிமனை காங்கேயம்- பழைய கோட்டை சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சுமார் 90 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பணிமனையில் கோவை அரசு போக்குவ ரத்து கழகத்தின் கீழ் இயங்கும் காங்கேயத்தில் இருந்து சென்னிமலை, ஈங்கூர் வழியாக பெருந்துறை வரை செல்லக்கூடிய அண்மையில் வழங்கப்பட்ட புதிய பஸ் நேற்று காலை பணிமனைக்கு வெளியே வந்ததும் பழுதாகி நின்றது. காங்கேயம் புறநகர்ப்பகுதியில் கிராமப் புறங்களுக்கு சரிவர பஸ்கள் வருவதில்லை என பொதுமக்கள் அவ்வபோது புகார் தெரிவித்து வரும் நிலையில் இது போன்று காங்கேயத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 முறைக்கும் மேலாக பழுதாகி நின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் பயணிகளுடன் பழுதாகி நிற்கும் போது பயணிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக பஸ்கள் நடுவழியில் பழுதாகி நிற்காமல் செல்லும் வகையில் பஸ்களை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.