சிகரெட் குடோனில் திருடியவர்களை கண்டுபிடிக்க போலீசார் பெங்களூர் விரைந்தனர்
போலீசார் நடவடிக்கை;
சேலம் 4 ரோடு சத்திரம் செல்லும் பாதையில் உள்ள தம்மண்ணசெட்டி ரோடு பகுதியில் சிவபாலன் (வயது 56) என்பவர் குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் சிகரெட், பிஸ்கட், சாக்லெட் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மொத்தமாக கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வழக்கம்போல் குடோனை சிவபாலன் பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு வந்து பார்த்தபோது, குடோனில் உள்ள பக்கவாட்டு பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 19 பண்டல்களில் இருந்த விலை உயர்ந்த சிகரெட்டுகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.27 லட்சத்து 69 ஆயிரம். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், 2 மர்ம நபர்கள் குடோனுக்குள் வந்து, சிகரெட் பண்டல்களை திருடி காரில் ஏற்றி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. குறிப்பாக ஒரே கம்பெனி சிகரெட்டை தேடி தேடி எடுத்துள்ளனர். பணம் வைத்துள்ள லாக்கரை அவர்களால் உடைக்க முடியாததால் அதை அப்படியே விட்டுவிட்டு சென்றனர். ஆனால் அந்த லாக்கரில் ரூ.10 லட்சம் இருந்துள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் மற்றும் காரின் பதிவெண் ஆகியவற்றை வைத்து சிகரெட் பண்டல்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், அந்த கார் பெங்களூருவை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்து சென்று அங்கு முகாமிட்டு சிகரெட் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.