காதல் திருமணத்தால் டீக்கடை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்
சிசிடி காட்சிகள் சமூக வளத்தளத்தில் வைரலாக பரவுகிறது;
பெரம்பலூர் அருகே காதல் மனைவியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், மீண்டும் காதல் கணவருடன் அவர் சேர்ந்ததால், அதனை ஏற்காத காதலியின் பெற்றோர் அவரது டீ கடையை அடைத்து உடைத்ததோடு அவரது தம்பியை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கும் இவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் தீபிகா என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வசதி காரணமாக இவர்களது காதலை பெற்றோர்கள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஐயப்பனும் தீபிகாவும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டு உப்பிலியபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை தேடி கண்டுபிடித்த தீபிகாவின் உறவினர்கள் அவர்களை பிரித்து தீபிகாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இரண்டாவது திருமணம் செய்த தீபிகாவிற்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது கணவருடன் வாழப் பிடிக்காத தீபிகா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றார். இதனையடுத்து தீபிகாவின் பெற்றோர் மீண்டும் இரண்டாவது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வற்புறுத்தியதால் தீபிகா தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை அவரது பெற்றோர்கள் காப்பாற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து தீபிகா ஐயப்பனை தொடர்பு கொண்டு அவருடன் தலைமறைவாகி விட்டார். இவர்களை தீபிகாவின் பெற்றோர்கள் தேடி வருவதை அறிந்த ஐயப்பன் - தீபிகா இருவரும் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு சென்ற தீபிகாவின் பெற்றோர்கள் சமாதானம் அடையாமல் திரும்பி வந்து விட்டனர். இந்நிலையில் நேற்று ஐயப்பனின் சகோதரர் முருகானந்தம் என்பவர் நாரணமங்கலம் கிராமத்தில் அவர்களுக்கு சொந்தமான ஆவின் பாலகத்தை திறந்து உள்ளார். அப்போது அங்கு சென்ற தீபிகாவின் பெற்றோர்கள் ஐயப்பனை தாக்கியதோடு ஆவின் பாலகத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட ஐயப்பன் தரப்பினர் இன்று(16ம் தேதி)இரவு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்துள்ளனர்.