ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள்;
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் வார இறுதி நாளான நேற்று ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. முக்கிய சாலைகளான ஒண்டிக்கடை, படகு இல்ல சாலைகளில் பெரும்பாலும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாயினர். மேலும் ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் குகை கோவில், லேடிஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ரோஸ் கார்டன், ஜென்ஸ் சீட் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று ஏற்காட்டின் அழகை ரசித்தனர். ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலையில் இருந்தே வெயில் சுட்டெரித்தாலும், அதை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்தனர். மாலை நேரத்தில் ஏற்காடு படகு இல்ல பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.