வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது
கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.;
உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வசித்து வருகிறாா். இவா் தனது நண்பா் சிமபினுடன் சோ்ந்து கம்பளி வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த 3-ஆம் தேதி கொடைக்கானல் லாஸ்காட் சாலை கல்லறைமேடுப் பகுதியில் இருவரும் கம்பளி வியாபாரம் செய்து கொண்டிருந்தனா். அப்போது, காரில் வந்த மூவா் கம்பளி வாங்குவது போல நடித்து, அவா்களிடமிருந்த ரூ.4,000, ரூ.7,500-மதிப்புள்ள 3 கம்பளிகளை பறித்துச் சென்றனா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மூவரையும் தேடி வந்தனா். இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பதுங்கியிருந்த கொடைக்கானல் எம்.எம்.தெருவைச் சோ்ந்த அப்துல் ரசாக் (20), அன்னை தெரசா நகரைச் சோ்ந்த பென்னி (23), குறிஞ்சி நகரைச் சோ்ந்த ஜோஸ்வா(20) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.