குமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த 22 வயதான வாலிபர் ஒருவமுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடந்த 30ஆம் தேதி மார்த்தாண்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவி தரப்பு மற்றும் வாலிபர் தரப்பினர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாக கூறியதால் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படாமல் பிரச்சனை முடிவடைந்தது. ஆனால் மீண்டும் அந்த வாலிபர் பழக்கத்தை மாணவியுடன் தொடர்ந்து வந்தார். ரகசியமாக இருவரும் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மாணவி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் பெற்றோர் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு இடையே மாணவியுடன் பழகி வந்த வாலிபரும் மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி நிஜமாகவே அந்த வாலிபருடன்தான் சென்றாரா ? அல்லது கடத்தப்பட்டாரா? என்பது போன்ற பல கோணங்களில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.