கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி உட்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம் பகுதியில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தனி பெண் தாசில்தார் பாரதி என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்த முயன்றார். வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது. உடனடியாக வாகனத்தை பின்னால் துரத்தி சென்றனர். ஆனால் கடத்தல் வாகனத்தின் பக்கத்தில் பைக்கில் ஒரு நபர் பாதுகாப்புக்காக சென்று கொண்டிருந்தார். இதனால் அதிகாரிகளால் அந்த வாகனத்தை முந்தி சென்று பிடிக்க முடியவில்லை. சுமார் 15 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்றும் பிடிக்க முடியாத நிலையில், சொகுசு கார் திடீரென கேரளப் பகுதியில் நுழைந்து மாயமானது. இது குறித்து தாசில்தார் விசாரித்து வருகின்ற நிலையில், நேற்று காலை முதல் கடத்தல் வாகனத்தை அதிகாரிகள் துரத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.