செங்குன்றம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் கட்டப்பஞ்சாயத்து செய்த புகாரில் பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் உட்பட 3 பேர் கைது. 48 லட்சம் பெற்று தர 12 லட்சம் கமிஷன் கேட்டு மிரட்டியதாக ஆவடி காவல் ஆணையரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் மொளகாப்பொடி வெங்கடேஷ் என்கிற கே.ஆர்.வெங்கடேஷ். இவர் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளாரா எனவும் தேர்தல் பறக்கும் படை சோதனைகள் நடத்தப்பட்டு இருந்தது. அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்திருந்த போது அவரை கே ஆர் வெங்கடேஷ் நேரில் சந்தித்து அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த தீபன் சக்ரவாரத்தி, நுங்கம்பாக்கம் பேனசோனிக் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். பாடியநல்லூரை சேர்ந்த கணபதிலால் என்பவருக்கு சொந்தமான எலெட்ரிக்கல்ஸ் கடைக்கு சுமார் 48லட்ச ரூபாய் மதிப்பில் பொருட்களை சப்ளை செய்துள்ளார். இதே போல திருமுல்லைவாயலை சேர்ந்த கோகுலவாசன் என்பவரும் சுமார் 50லட்ச ரூபாய்க்கு கணபதிலால் கடைக்கு பொருட்களை சப்ளை செய்துள்ளார். கணபதிலால் பொருட்களுக்கான பணம் கொடுக்காத நிலையில் கோகுலவாசன், தீபன் சக்ரவர்த்தியை அழைத்து கொண்டு பாடியநல்லூரை சேர்ந்த பாஜக நிர்வாகி வெங்கடேஷிடம் சென்றுள்ளார். அப்போது பாஜக நிர்வாகி கணபதிலாலிடம் இருந்து பணத்தை பெற்று தர கமிஷனாக கோகுலவசனிடம் 8லட்சமும், தீபன் சக்கரவர்த்தியிடம் 12லட்சமும் கேட்டு முதலில் 1லட்சம் அட்வான்ஸ் கேட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் தலா 1 லட்ச ரூபாய் பணத்தை பாஜக நிர்வாகி வெங்கடேஷிடம் கொடுத்துள்ளனர். எனினும் பணம் திருப்பி கொடுக்கப்படாத நிலையில் தீபன் சக்ரவர்த்தியை பாஜக நிர்வாகி வெங்கடேஷ் உட்பட மூவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இதனையடுத்து தீபன் சக்ரவர்த்தி அளித்த புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பணம் கொடுக்கல் வாங்கலில் கட்டப்பஞ்சாயத்து செய்த புகாரில் பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் மொளகா பொடி வெங்கடேஷ் என்கிற கே.ஆர்.வெங்கடேஷ் (51), கணபதிலால் (45), கோகுலவாசன் (42) ஆகிய மூவரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். பணம் கொடுக்கல் வாங்கலில் கட்டப்பஞ்சாயத்து செய்த பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.