குமரி மாவட்டத்திற்குட்பட்ட ஆறு வட்டங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நேற்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்றது. கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டார். இம்முகாமில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்ததோடு அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வட்டவழங்கல் அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆய்வில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, கல்குளம் வட்டாட்சியர் ஜாண் ஹெனி, வட்ட வழங்கல் அலுவலர், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.