தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி மீது மோதிய சொகுசு கார்
நத்தம் மெய்யம்பட்டி அருகே தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி மீது மோதிய சொகுசு கார்.;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் மகன் சிவக்குமார் (வயது 59). இவர் தேனியில் நெடுஞ்சாலைத்துறையில் உதவி போட்ட பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் சொந்த ஊரில் இருந்து விட்டு இன்று பணிக்கு செல்வதற்காக காரைக்குடியிலிருந்து தேனி நோக்கி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் மெய்யம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே கரூர் மாவட்டம் முசிறி பழம்புத்தூரை சேர்ந்த நல்லதம்பி மகன் சதீஷ்குமார் (வயது 45) என்பவர் தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு நத்தத்திலிருந்து கொட்டாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென சொகுசு கார் பலமாக மோதியது. இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. லாரியின் டீசல் டேங்க் மற்றும் டயர்கள் சேதம் அடைந்தது. காரை ஓட்டி வந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.