குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு.
மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு, விற்பனை செய்யப்படும் மருந்துகளின் விற்பனை மற்றும் இருப்பு நிலவரம், தினசரி விற்பனை செய்யப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, படவீடு பேரூராட்சி, அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் பட்டா வரன்முறை செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், கடைகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களின் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கடைகளில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க வைத்திருந்த நெகிழி பைகளை பறிமுதல் செய்து, பேரூராட்சியின் மூலம் அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பொதுமக்களிடம் நெகிழி பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை உபயோகப்படுத்துமாறு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, படவீடு பேரூராட்சி வார்டு எண் 2-ல் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.6.90 இலட்சம் மதிப்பீட்டில் வடிநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, குமாரபாளையம் வட்டம், தட்டான்குட்டை ஊராட்சி சமத்துவ மயானத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பள்ளிபாளையம் வட்டம், சமயசங்கிலி அக்ரஹாரம் காவேரி ஆறு, பவானி கட்டளை கதவணையில் நில விவரபட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.