அரியலூரில் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை
அரியலூரில் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.;
அரியலூர், ஜூன் 26- அரியலூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் நடத்திய சாலை பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலுள்ள கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி, வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். அரிலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கலந்து கொண்ட அரசு மற்றும் தனியார் சிமென்ட் ஆலை அலுவலர்கள் மற்றும் தனியார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களிடம், காலை 7 முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் மாலை 5.30 மணி வரையிலும், கனரக வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் கண்டிப்பாக தார்பாய் மூடி கொண்டு செல்ல வேண்டும். மதுப்போதையில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது, சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.