பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படுவதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல்.;
பெரம்பலூர் மாவட்டம் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படுவதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025-2026-ஆம் நிதியாண்டிற்காக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10,000/-அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5,000/- மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று), வயது வரம்பு – 25 வயதிற்குமேல் இருத்தல் வேண்டும். திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்பிக்க வேண்டும்.மேலும், பிறந்த தேதிக்கான சான்று மற்றும் ஆண்டு வருமான வரம்பு ரூ. 1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்). எனவே, இத்திட்டதின்கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை 23.06.2025 முதல் 14.07.2025-க்குள் பெரம்பலூர் மாவட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தரைத் தளம், என்ற முகவரியில் சமர்பிக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.