போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?: அதிர்ச்சி தகவல்கள்
நடிகர் ஸ்ரீகாந்த் தவிர வேறு எந்த நடிகை, நடிகருக்காவது போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கையின் போதைப்பொருள் பயன்படுத்தி கைதான வழக்கில் பல அதிர்ச்சிகரமான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் தனியார் பார் ஒன்றில் இசிஆர் ராஜா என்பவர் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். அங்கு கடந்த மாதம் 14 ஆம் தேதி அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார், அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் மற்றும் அவர்களின் நண்பர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது பாரில் மது அருந்தி கொண்டு இருந்த செல்வா என்பவரின் கும்பலுக்கும், இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மது பாட்டில் மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த போலீசார், அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பிரசாந்த், அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் உட்பட ஒன்பது பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து அதிமுக தொழில்நுட்ப பிரிவில் இருந்து பிரசாத் அதிரடியாக நீக்கப்பட்டார். பின்பு கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிரசாத்திடம் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார் (38) என்பவரிடம் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெங்களூருவில் இருந்த பிரதீப் குமாரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டை சேர்ந்த ஜான் (38) என்பவரிடம் பெங்களூருவில் போதைப்பொருள்களை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு தனிப்படை போலீசார் ஓசூரில் வைத்து ஜானை கடந்த 17ஆம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து 11 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரிடமும் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பிரதீப் குமாரின் செல்ஃபோனை போலீசார் ஆய்வு செய்தபோது அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் மற்றும் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரிடம் அவர் அடிக்கடி உரையாடியிருப்பது தெரிய வந்தது. மேலும் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் ஸ்ரீகாந்தை வைத்து புதிய படம் தயாரித்து வருகிறார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு படப்பிடிப்பின் போது பிரசாந்த் போதைப்பொருளை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீகாந்த் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததும், அதன் பிறகு பிரதீப் குமாரை தொடர்பு கொண்டு கொக்கைன் கேட்டு வாங்கியதும் தெரியவந்துள்ளது. மேலும் பலமுறைக்கு மேல் ஸ்ரீகாந்த் கொக்கின் போதைப் பொருளை வாங்கி ஜிபே மூலம் பணம் செலுத்தியதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஸ்ரீகாந்த் இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டது. உடனே, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்திடம் சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே ஸ்ரீகாந்த் இல்லத்தில் போதைப்பொருள் ஏதாவது உள்ளதா? என்றும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், ஸ்ரீகாந்த் செல்ஃபோனை ஆய்வு செய்தபோது அவர் பிரதீப் குமாருக்கு தொடர்ந்து ஜிபே மூலம் பணம் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடிக மீது என் NDPS 8c, போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தியது, NDPS 22b குறைந்த அளவை தாண்டியும் வணிகரீதியாக போதைப்பொருளை வைத்திருத்தல், NDPS 29(1) ஆகிய போதை பொருள் தடுப்புச் சட்ட பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்துக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின், எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அடுத்த மாதம் ஏழாம் தேதி வரை ஸ்ரீகாந்தை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனடிப்படையில் போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் பிரசாத்திடம் இருந்து 8 முறை ஸ்ரீகாந்த் கொக்கையின் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் தவிர வேறு எந்த நடிகை, நடிகருக்காவது போதைப்பொருள் சப்ளை செய்துள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக சிறையில் இருக்கும் பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.