ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்ற கல்வி அலுவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
சோகச்சம்பவம்;
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்க வந்த கல்வி அலுவலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.தெய்வபாலன் (54). இவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தார். இவர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்ற சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, திடீரென மயங்கி விழுந்த இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.