சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட்டில் இருசக்கர வாகனம் மோதி சிறப்பு சார்பு ஆய்வாளர் தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்து உயிரிழப்பு

சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட்டில் இருசக்கர வாகனம் மோதி சிறப்பு சார்பு ஆய்வாளர் தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்து உயிரிழப்பு;

Update: 2025-06-25 14:48 GMT
காரியாபட்டி அருகே எஸ்.கல்லுபட்டி விலக்கு பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட்டில் இருசக்கர வாகனம் மோதி சிறப்பு சார்பு ஆய்வாளர் தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்து உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் விஜயகுமார்(52). இவர் அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி அலுவலகத்தில் ஏ.எஸ்.பி தனிப்படை சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக சென்று விட்டு மதுரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் விஜயகுமார் அருப்புக்கோட்டை திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரியாபட்டி அருகே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.கல்லுபட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட்டில் விஜயகுமார் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமாருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காரியாபட்டி காவல் நிலைய ஆய்வாளர் விஜயகாண்டீபன் தனது வாகனத்தில் விஜயகுமாரை ஏற்றிக்கொண்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News