தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை
வியாபாரிகள்;
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, மது போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர் ராஜா சீனிவாசன் தலைமையில் மருத்துவக்கல்லூரி பகுதி வணிகர் சங்க தலைவர் முத்துராமன், செயலாளர் ஜெயக்குமார், நிர்வாகி அருள் சகாயகுமார் ஆகியோர் முன்னிலையில், வணிகர்கள், தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் செல்வத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழகத்தில் வேறு எந்த அரசு மருத்துவக்கல்லூரியிலும் இல்லாத வகையில் அனைத்து விதமான கடைகளும் செயல்படுகிறது. மேலும் அந்த கடைகளில் அனுமதி பெறப்பட்ட பொருட்களை மட்டும் விற்பனை செய்யாமல் அனைத்து வகையான உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களும் விற்கப்படுகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் விற்கப்படுகிறது. மருத்துவமனை வளாகத்திற்குள் ஒப்பந்த அனுமதி மற்றும் லைசென்ஸ் இல்லாமல் பல பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதனால் மருத்துவமனைக்கு வெளியே வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வரும் வியாபாரிகள் வாடகை கூட செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் 100-க்கும் மேற்பட்ட வணிர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மது போன்றவையும் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது மாவட்ட செயலாளர் அப்துல்நசீர், நகர தலைவர் சதீஷ், துணைத்தலைவர் முகமதுமசூது, மங்களபுரம் கிளை தலைவர் சந்தானகுமார், நிர்வாகிகள் முத்துராமன், பிரபு, ஜெயக்குமார், சந்தானகுமார், இளங்கோவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.