உலக போதைப் பொருட்கள் எதிர்ப்பு
உலக போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.;
உலக போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கலால் துறையின் சார்பில் உலக போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினத்தை (ஜூன் 26) முன்னிட்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்தும், கள்ளச்சாராயம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா ஆகியோர் இன்று (26.06.2025) பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினமான இன்று 26.06.2025 தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனடிப்படையில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, தந்தை ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி, உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளும், சுமார் 60க்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர். பேரணியின்போது குடிக்காதே நற்குடியை மடிக்காதே, போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவோம்! அதற்கு எல்லோரும் இணைந்து பாடுபடுவோம், ஆரோக்கியத்தை தேர்ந்தெடுங்கள் தீங்கல்ல, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆரம்பம், போதைப் பொருட்கள் இல்லாத தொடங்குங்கள், குடித்தால் குடல் புண்ணாகும், உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மாணவ,மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைப் பொருட்கள் இல்லாத பெரம்பலூரை உருவாக்கும் என்ற வாசகம் அடங்கிய சுய புகைப்படம் பதாகைகள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் நகராட்சி அலுவலகம் பாலக்கரை பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினரால் நிறுவப்பட்டிருந்த சுய புகைப்படம் பதாகையில் பொது மக்களுக்கு போதை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பேரணியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி, புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று, நகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் பாலக்கரை பகுதியில் வந்து முடிவுற்றது. முன்னதாக, போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி அனைத்து துறை அலுவலர்கள், காவல்துறையினருடன் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வினில் உதவி ஆணையர் (கலால்) ( பொ) சுந்தரராமன், பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், கோட்ட கலால் அலுவலர் வனிதா, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமலதா, உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வகுமார் பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.