சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது
சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. -;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் 1989 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது, மேலும் இது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. சட்டவிரோத போதைப்பொருள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், “நான் போதைப்பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். குழந்தைகளையும், நண்பர்களையும் போதைக்கு ஆளாகாமல் தடுத்து நிறுத்துவேன். மாவட்டத்தில் போதை பொருட்களை வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்ட கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பின்னர், “நான் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன், போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்கு அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்“ என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.