தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரனிடம் நடந்த குறுக்கு விசாரணை

திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.;

Update: 2025-06-26 14:16 GMT
கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கில், கடந்த 19-ம் தேதி நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சான்று ஆவணங்களாக பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று (ஜூன் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நயினார் நாகேந்திரன் ஆஜராகியிருந்தார். அவரிடம் ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். ராபர்ட் புரூஸ் சொத்து விவரங்கள் குறித்த ஆவணங்களை பெற்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி சுமார் ஒரு மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தார். இந்த குறுக்கு விசாரணை முடிவடையாததால், விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

Similar News