ஆர்ப்பாட்ட வழக்குகள்: எம்.பி., எம்.எல்.ஏ. விடுதலை

தீர்ப்பு;

Update: 2025-06-26 15:59 GMT
கும்பகோணத்தில் தடையை மீறி நடைபெற்ற இரு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட 21 பேரை தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது. ஒன்றிய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு கொண்டு வந்ததைக் கண்டித்து சென்னையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டார்.  இதைக் கண்டித்து கும்பகோணத்தில் திமுக சார்பில் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் (தற்போது மாநிலங்களவை உறுப்பினர்), கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், கும்பகோணம் துணை மேயர் சு.ப.தமிழழகன் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, 2018 ஆம் ஆண்டில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணத்தில் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எஸ்.கல்யாணசுந்தரம், சாக்கோட்டை க.அன்பழகன், துணை மேயர் சு.ப. தமிழழகன் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரு வழக்குகளும் தஞ்சாவூர் முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி கனிமொழி விசாரித்து அனைவரையும் புதன்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Similar News