நிலத்தடி நீருக்கும் வரியா...  ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.. பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் - த.வி.ச மாநில பொதுச் செயலாளர் எச்சரிக்கை 

விவசாயிகள் போராட்டம்;

Update: 2025-06-28 15:50 GMT
விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கும் வரி விதித்து வயிற்றில் அடிக்கும் வன்முறையை கண்டித்தும், குடிமக்கள் வாழ்வோடு விளையாடும் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கையைக் கண்டித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் கண்டன உரையாற்றினார்.  இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் சோ.பாஸ்கர் (சிபிஐ), கரும்பு விவசாயிகள் சங்கம்  டி.கோவிந்தராஜ், தமிழ்நாடு நலிவுற்ற விவசாயிகள் சங்கம் முகமது இப்ராஹிம், காவிரி விவசாயிகள் சங்கம் ஏ.கே.ஆர். ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ், அறிவழகன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு உள்ளிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தோழமை சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,  "ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் விவசாயத்திற்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தினால், அதற்கு வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனைக் கண்டித்தும், அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த 11 ஆண்டுகளில், தவறான வேளாண் கொள்கைகளை கடைப்பிடித்து வருவதால் வேளாண் விவசாயிகள் பெருமளவு நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். பாஜக ஆட்சிக்காலத்தில் மட்டும் ஏறத்தாழ 1 லட்சத்து 45 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கப்படவில்லை. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசாங்கம் எந்தவித இழப்பீடும் வழங்குவதில்லை. இந்தியாவில் உள்ள விளை நிலங்களில் 35 விழுக்காடு விளை நிலங்களுக்கு மட்டுமே முறையான நீர்ப்பாசன ஏற்பாடுகள் உள்ளது. மீதமுள்ள 55 விழுக்காடு விளைநிலங்களில் மழைநீரை பயன்படுத்தி விவசாயம் நடைபெறுகிறது. அதுபோக மீதமுள்ள இடங்களில் நிலத்தடி நீரைப்பயன்படுத்தி தான் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 22 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. பாசனக்கிணறுகள் மூலமும் சாகுபடி நடந்து வருகிறது. இந்த நிலத்தடி நீருக்கும் வரி விதிப்பது என்பது இந்தியாவில் இருக்கும் ஏழை, சிறு, குறு, நடுத்தர விவசாயிகளை வெகுவாக பாதிக்கும். இந்த விவசாயிகளில் படிப்படியாக விவசாயத்தில் இருந்து அப்புறப்படுத்தி கார்ப்பரேட் கைகளில் இந்த விளைநிலங்களை கொடுப்பதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய மோடி அரசு செய்து வருகிறது. எனவே, இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது. இந்த தொழிற்சாலைகளுக்காக பூமியில் 2000, 3000 அடிகள் துளையிட்டு பல கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல், வரி விதிக்காமல், மானிய சலுகைகளை  அள்ளி வழங்குகிறது மோடி அரசாங்கம். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள வேளாண் தொழிலில் ஈடுபடக்கூடிய விவசாயிகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கு வரி விதிப்பது என்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது. எனவே, அந்த அறிவிப்பை ஒன்றிய மோடி அரசாங்கம் உடனடியாக திரும்ப பெற வேண்டும். அதை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இதற்குப் பிறகும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய மோடி அரசாங்கம் முனையுமேயானால், பல்வேறு விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து நாடு தழுவிய அளவில், எப்படி மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்ததோ, அது போன்ற போராட்டத்தை முன்னெடுப்போம்" இவ்வாறு தெரிவித்தார்.

Similar News