பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு - எடை இயந்திரம் சரி பார்ப்பதில் தாமதம், பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி
நியாய விலைக்கடை;
பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு - எடை இயந்திரம் சரி பார்ப்பதில் தாமதம் காரணமாக பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மாதம் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, அடுத்த மாதம் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. பொது மக்களுக்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகள் மூலம், அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையிலும், அரிசியை விலையில்லாமலும் வழங்கி வருகிறது. இந்நிலையில், நியாய விலைக்கடைகளில் விரல் ரேகை இயந்திரமும், எடை வைக்கும் இயந்திரமும் ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் விரல் ரேகை பதிவு செய்து, எடை மெஷினில் சரி பார்த்த பிறகு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடும் தாமதம் ஏற்படுகிறது. இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு கடைக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டை நியாய விலைக்கடை (எண். ஜிபிஓ 10) சனிக்கிழமையன்று பொருட்கள் வாங்க சென்ற பொது மக்களுக்கு விரல் ரேகை பதிவு செய்து, எடை இயந்திரத்தில் சரிபார்ப்பதில், தாமதம் ஏற்பட்ட காரணத்தால் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். ஒரு சிலர் மட்டுமே பொருட்கள் வாங்கி சென்ற நிலையில் பலரும் பொருட்கள் வாங்க முடியாமல் வீடு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை இருப்பதால் பொதுமக்கள் மீதம் திங்கள்கிழமை ஒரு நாள் மட்டுமே இருப்பதால் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இது போன்ற பிரச்னைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர் எனத் தெரிகிறது. இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியுமான கே.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "பொதுமக்கள் நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை பதிவு பிரச்சினையால் பொருட்கள் வாங்க முடியாமல் உள்ளது. இந்த மாதத்தில் இன்னும் ஒரு நாளே உள்ளதால் பொருட்கள் வாங்க முடியாத பொது மக்களுக்கு, இந்த மாதம் வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களை அடுத்த ஜூலை மாதத்தில் சேர்த்து வழங்க சம்பந்தப்பட்ட துறையினர், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.