புவனேஸ்வர்- ராமேஸ்வரம் ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா சாக்லெட் பறிமுதல்
கிரைம்;
புவனேஸ்வரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஒரு கிலோ 900 கிராம் கஞ்சா சாக்லெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலங்களிருந்து வரும் ரயில்களில் குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள், கஞ்சா ஆகியவற்றை அவ்வப்போது மர்ம நபர்கள் கடத்தி வந்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதையடுத்து இதுபோன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் உத்தரவின்படி, காவல்துறை தலைவர் செந்தில்குமாரி, காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மேற்பார்வையில், ஆய்வாளர் பிரேமா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் தலைமைக் காவலர்கள் சுமதி, சாந்தி, தீபா, திருவேங்கடம் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சனிக்கிழமை புவனேஸ்வரத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற வாராந்திர விரைவு ரயிலில் தனிப்படையினர் மயிலாடுதுறை முதல் தஞ்சாவூர் வரை ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா பெட்டி ஒன்றில் கழிவறை அருகே ஒரு பேக் கிடந்தது. அந்த பேக்கை சோதனையிட்ட போது, அதில் கஞ்சா சாக்லெட் இருந்தது. இந்த பேக் யாருடையது என காவல்துறையினர் கேட்டபோது, அதற்கு யாரும் உரிமை கோரவில்லை, இதையடுத்து அந்த பேக்கில் இருந்த ஒரு கிலோ 900 கிராம் கஞ்சா சாக்லெட்டை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.