நீங்கதான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்
மதுரை திருமங்கலத்தில் நிகிதா மீது புகார்கள் பல உள்ளன.;
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நகையை காணவில்லை என புகார் அளித்த நிகிதா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி சேர்ந்த நிகிதா (46) என்பவர் திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்த நிகிதா, தற்போது தாவரவியல் துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ஜெயபெருமாள் துணை ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அரசு அதிகாரியாக இருந்த ஜெயபெருமாளின் மனைவி சிவகாமி அம்மாள் மற்றும் அவரது மகள் நிகிதா ஆகியோர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக பல்வேறு பணமோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. மதுரை மாவட்டம் திரளி பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் என்பவரிடம் நிகிதாவின் குடும்பத்தினர், கடந்த 2010 டிசம்பர் மாதம் தங்களுக்கு துணை முதலமைச்சரின் உதவியாளர் தெரிந்தவர் என்றும், அவர் மூலமாக ராஜாங்கம் மகன் தெய்வத்துக்கு ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.9 லட்சமும், திரளி பகுதியைச் சேர்ந்த வினோத்குமாருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சத்தை ஜெயபெருமாள் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். ஆனால், அரசுப் பணி வாங்கித் தராததால், பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திரும்பிக் கேட்டபோது சிவகாமி குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் ராஜாங்கம், தெய்வம், வினோத் குமார் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெயபெருமாள், அவரது மனைவி சிவகாமி, மகன் கவியரசு என்ற வைபவ் சரண் சுவி, மகள் நிகிதா உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த 10.5.2011-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல, செக்கானூரணியை அடுத்த தேங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்த மொக்கமாயன் மகன் செல்வம், முத்துகுமார், மணிமேகலை ஆகியோருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு நிகிதா குடும்பத்தினர் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த பண மோசடி குறித்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு சிவகாமி அம்மாள், நிகிதா, அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.