முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்.
இராசிபுரம், காக்காவேரியில் உள்ள வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், பிரம்மாண்ட முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமானது நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாமக்கல் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் முன்னிலையில், காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த முகாமில் பொது மருத்துவம், இதயம், நரம்பியல், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவப் பிரிவுகளின் கீழ் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இதில் இராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.முகாமிற்கு வந்தவர்களுக்கு இரத்தப் பரிசோதனை, எக்ஸ் ரே, இசிஜி, எக்கோ மற்றும் யு எஸ் ஜி ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.மேலும், புற்றுநோய் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மேல் சிகிச்சைக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளும் வழங்கப்பட்டன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இம்முகாமிற்கு தமிழ்நாடு அரசின் , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் வருகை புரிந்து மேற்பார்வையிட்டார். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட சுகாதார அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர். அரசு மருத்துவமனைகளில் உள்ளது போன்ற அனைத்து நவீன வசதிகளும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலேயே கிடைத்ததால் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.