திருவோணம் அருகே அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு;
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. திருவோணம் வட்டம், காவாளிப்பட்டி சரகம், வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் புல எண் 460/ 3, பரப்பு 0.12.5 ஏர்ஸ் அளவிலான இடத்தில், வெட்டுவாக்கோட்டை, புதுவிடுதி, பெத்திதெரு, மூனுமாங்கொல்லை, செவ்வாய்பட்டி, ஊரணிபுரம், சத்திரப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பட்டியல் இன மக்களுக்கு சொந்தமான 450 ஆண்டுகள் பழமையான மின்னடியான் - காளியம்மன் கோயில் உள்ளது. இந்த இடத்தை இதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதனால் கோயிலுக்கு செல்ல முடியாமலும், அந்த பாதையை பயன்படுத்த முடியாமலும் பட்டியல் இன மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து இப்பகுதி பட்டியல் இன மக்கள், திருவோணம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.பாஸ்கர் தலைமையில், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தியை சந்தித்து ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு மனு அளித்தனர். இந்நிலையில் திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி தலைமையில், வருவாய் துறையினர், நில அளவை துறையினர் பிரச்சனைக்குரிய சம்பந்தப்பட்ட இடத்தில் வியாழக்கிழமை நில அளவை மேற்கொண்டு, தமிழ்நாடு நில ஆக்கிரமணச் சட்டம் 1905 இன் கீழ் ஆக்கிரமணதாரருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு இடம் கண்டறியப்பட்டது. தற்போது மேற்கண்ட புல எண்ணில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், அறுவடைக்கு பிறகு ஆக்கிரமணம் அகற்றப்படும் என ஆக்கிரமணதாரர்களுக்கு வருவாய் துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. நூற்றாண்டு காலமாக இருந்த பிரச்னையை தீர்த்து வைத்த வட்டாட்சியருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.