பாளையப்பட்டி கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட பகுதியில் புதையலை தேடும் சமூக விரோதிகள்: பாதுகாக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு  

கோரிக்கை மனு;

Update: 2025-07-04 15:11 GMT
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே  பாளையப்பட்டியில் உள்ள "தாழவாரி” என்னும் பகுதியில், பழங்காலத் தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்களாகிய முதுமக்கள் தாழியை ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டறிந்தனர். இந்நிலையில், சமூக விரோதிகள் புதையல் இருப்பதாக, முதுமக்கள் தாழிகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். இது குறித்து, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாளையப்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், "பாளையப்பட்டியில், 54 ஏக்கர் பரப்பில், தொன்மையான முதுமக்கள் தாழிகள் இருந்துள்ளன. இவற்றில் மண்ணரிப்பினால் சுமார் 25க்கும் மேற்பட்ட தாழிகள் சிதைந்து காணப்பட்டது. மேலும், கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும், இரும்பாலான பொருட்களின் எச்சங்களும், இரும்பை உருக்கியது எஞ்சிய இரும்புக் கழிவுகளும், காலத்தின் தொன்மையைப் பறைசாற்றுவனவாகக் காணக்கிடக்கின்றன. மேலும், வெளியே தெரியாமல் மண்ணுள் புதையுண்டு கிடக்கக் கூடிய தாழிகளைக் கண்டறிந்திடவும், இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பகுதியையும் கண்டறிய வேண்டும். தமிழர் நாகரீகம் அறிவியல் பூர்வமானது மற்றும் காலத்தால் முந்தியது என்பதை நிறுவிட இவ்விடத்தில் ஆய்வு மேற்கொள்வது மிக அவசியமாகும். இத்தகைய அகழாய்வு மூலம், சோழ நாட்டு மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் வெளிக்கொண்டு வர முடியும். ஆய்வாளர்களால் சமீபத்தில் கண்டறியப்பட்ட பகுதிகளில் பொருட்கள் சிதறி, பாதுகாப்பின்றி கிடக்கின்றன. சமூக விரோதிகள் பலர் புதையல் இருப்பதாக கூறி, தொல்பொருட்களை களவாடி செல்கின்றனர்.  எனவே,  முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட இடம் அரசுக்குச் சொந்தமானது என்பதால், வரலாற்று முக்கியத்துவம் கருதி, அரசு இந்த இடத்தை பாதுகாத்து, பராமரிக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Similar News