கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கிராவல் மண் எடுக்க உரிமம் வழங்கப்படாததால், 2 மாதங்களாக மண் எடுக்க முடியவில்லை. இதனால், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை இழந்துள்ளனர். லாரி உரிமையாளர்கள் லாரிக்கு மாதக் கடன் தவணை செலுத்த முடியாத வகையில் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதை வாழ்வாதாரமாகக் கொண்டு தினக்கூலியாக வேலை செய்யும் ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதால், கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும், கிராவல் மண் கிடைக்காததால் புதிதாக வீடு கட்டுபவர்கள், பொறியாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். கட்டடப் பணிகள் தேங்கியுள்ளன. இது குறித்து கனிம வளத் துறை அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி வேலை இழந்துள்ள ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் ஜி.சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் சிங்.இரா.அன்பழகன், பொருளாளர் ஆர்.டி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.